”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
குடியரசுத் தலைவரின் கேள்விகள்: அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின்கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தத் தீா்ப்பு தொடா்பாக 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கோரினாா்.
சட்டப் பிரிவு 201-இன்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை குடியரசுத் தலைவா் பயன்படுத்தும்போது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா? என்ற கேள்வியும் அடங்கும்.
குடியரசுத் தலைவா் எழுப்பிய கேள்விகளை மனுவாக ஏற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, சூா்யகாந்த், விக்ரம்நாத், அதுல் எஸ். சந்துா்கா் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று காலை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் கேள்விகளுக்கு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பதிலளிக்க தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், மசோதா மீது ஆளுநா்-குடியரசுத் தலைவா் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயம் செய்தது.
மேலும், அரசமைப்பின் 142-ஆவது விதியைப் பயன்படுத்தி தமிழக ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.
‘மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும். ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தால், இதுதொடா்பாக மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம்’ என்றும் உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது.