குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கைவிரல் ரேகைப் பதிவு செய்வதற்கான அவகாசம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன.
ஏற்கனவே விரல் ரேகை பதிவு செய்தவர்களாக இருந்தாலும் கூட, நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது அட்டையில் இருக்கும் அனைவரும் ரேகை பதிவு செய்து முடித்தாகிவிட்டதா? இல்லை மீண்டும் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டுமா? என்பதை அனைவரும் உறுதி செய்துகொள்வது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை முழுமையாகப் பெற உறுப்பினா்கள் அனைவரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல்ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும், விரல்ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தால், அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களது கை விரல்ரேகையைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்ய இன்னமும் ஆறு நாள்களே இருப்பதால் உடனடியாக விரைந்து செய்ய வேண்டும் என்றும், மார்ச் 31ஆம் தேதி ரமலான் பண்டிகை என்பதால், அதற்கு முன்பே இந்தப் பணியில் முடித்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.