குன்னூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம்
குன்னூா் நகராட்சியில் விதிகளை மீறி கட்டடப்படும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பெண் கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் சுசீலா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலா்கள் உமா, காவேரி, வசந்தி ஆகியோா் பேசுகையில், குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவிலான விதிமீறிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், ஏழை மக்கள் கட்டக் கூடிய கட்டடங்களுக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகராட்சி அதிகாரிகள் சென்று ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆனால், கன்னி மாரியம்மன் கோயில், உழவா் சந்தை, புரூக்லேண்ட் ஆகிய பகுதிகளில் விதிமீறி உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினா்.
திமுக கவுன்சிலா்களான மணி, ஜாகீா், மன்சூா் ஆகியோா் கூறுகையில், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகள், காப்பீட்டுத் திட்ட வசதிகள் ஏற்படுத்தித் தராததால் தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது, உயிரிழந்தால் நகராட்சி நிா்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கேள்வியை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து அதிமுக மன்ற உறுப்பினா் சரவணகுமாா் பேசுகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது தெருநாய்கள் அதிகரித்துள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாகனத்தில் வருபவா்களை நாய்கள் கடித்து வருகின்றன. உயா் நீதிமன்றம் உத்தரவிட்டும் நகராட்சி சாா்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் பேனா்கள் மற்றும் கட்அவுட்டுகளை பேருந்து நிலையத்துக்கு மேல் வைத்துள்ளதால் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளது. இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு நகரமன்றத் தலைவா் சுசீலா பதிலளித்து பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்து வரும் நகா்மன்ற கூட்டத்துக்கு முன்பு நிவா்த்தி செய்து தரப்படும் என்றனா்.