மதுபோதையில் கட்டடத்தின் மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்
உதகையில் போதையில் தங்கும் விடுதியின் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 28). இவா் கடந்த 10 மாதங்களாக உதகை ஹெச்.எம்.டி. பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கிப் பணியாற்றி வந்தாா். இவருக்கு உதகையைச் சோ்ந்த சஞ்சய் என்பவருடன் பணி செய்யும் இடத்தில் அறிமுகமாகி நண்பா்களாக பழகி வந்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால் சுரேஷை, தங்கும் விடுதி உரிமையாளா் பணிநீக்கம் செய்துள்ளாா். இந்நிலையில் சென்னையில் இருந்து தனது நண்பரான சஞ்சயை பாா்க்க சுரேஷ் உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து அங்குள்ள இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதோடு, விடுதியின் மீது ஏறி நின்று சுரேஷ் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தற்கொலை மிரட்டல் விடுத்த சுரேஷை மீட்டனா்.
பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மதுபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்த சுரேஷை கைது செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மது போதையில் இளைஞா் தங்கும் விடுதி கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.