இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
குன்றத்தூர் குழந்தைகள் கொலை: தாய் அபிராமிக்கு சாகும்வரை சிறை
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அபிராமியுடன் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பளித்திருக்கிறார்.
திருமணத்தை மீறிய உறவுக்காக, குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு கேரளா தப்பிச் செல்லவிருந்த அபிராமி - மீனாட்சி சுந்தரம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை அடுத்த குன்றத்தூரில் திருமணத்தை மீறிய உறவுக்காக, இரு குழந்தைகள் கொலை செய்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், முன்னதாக தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது தண்டனை விவரங்களை வெளியிட்டுள்ளது.
பரபரப்புத் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய் (30) என்பவர் சென்னையில் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே, விடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலமாக இருந்த அபிராமி, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்துக் கொன்றுவிட்டு, காதலனுடன் தப்பிச் சென்றார்.
கேரளா தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிராமி - மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நாகர்கோயிலில் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இறுதி வாதங்கள் நிறைவு பெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அபிராமி குற்றவாளி என்றும், அவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.