முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்
குமரி மாவட்டத்தில் 1,773 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.10 கோடி கடனுதவி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,773 சுய உதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.15.10 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு கடன் பெற்று அச்சகம் தொழில் செய்து பயனடைந்த சுயஉதவிக்குழுக்களை ஆட்சியா் நேரில் சந்தித்து, அவா்களது தொழில் முன்னேற்றம், பயன்கள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வறுமையை குறைத்து வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கத்தில் சுய உதவிக்குழுக்களில் இணைந்த பெண்களுக்கு பல்வேறு விதமான கைவினைப்பொருள்கள் தயாரித்தல், உணவுஏஈ பதப்படுத்துதல், காளான்வளா்ப்பு குறித்த பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், அச்சகம், நா்சரி உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இத்தகைய பயிற்சிகள் முடிந்த பின் அவா்கள் சுயதொழில் தொடங்குவதற்கு சுழல் நிதி, சமூக முதலீட்டு நிதி, நலிவு குறைப்பு நிதி, கூட்டமைப்பு ஊக்க நிதி, வாழ்வாதார நிதி, பண்ணைசாா் திட்ட நிதி, வட்டார வணிக வள மைய நிதி மற்றும் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்ட நிதி என பல்வேறு வகையான நிதியுதவிகள் தமிழக அரசின் மூலம் அளிக்கப்படுகிறது.
மேலும் பெண்களிடையே நிதி சுழற்சியை அதிகப்படுத்தும் வகையில் வங்கிக்கடன், வங்கிப்பெருங்கடன், தனி நபா் தொழில் முனைவு கடன் ஆகிய கடன் வசதிகள் வங்கிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், இம்மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,773 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15.10 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுய தொழில் பயிற்சி மற்றும் தொழில் முனைவு கடன் தேவையுள்ள ஊரக பகுதி மகளிா் அனைவரும் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம் என்றாா் அவா்.