குமரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாநில பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாதுரை.
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்ட பிரதிநிதிகளுக்கு மாவட்ட அளவிலான வன உரிமைச்சட்டம் குறித்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் அண்ணாதுரை பேசியதாவது: காடுகளை நம்பி வாழ்பவா்கள் பழங்குடியினா். தமிழகத்தில் மலைக்கிராமங்களில் காணி, இருளா், காட்டு நாயக்கா், மலைவேடன், முதுவன், புலயா் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்குடியினா் இருக்கின்றனா். இவா்கள் வாழும் இடங்களை, பயன்படுத்தும் இடங்களை அவா்களுக்கே உரிமை அளிக்கும் வகையில் வன உரிமைச் சட்டம் 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் இச்சட்டம் குறித்து வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, வனத்துறை, மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள் இணைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வன உரிமைச்சட்டம் குறித்து கணினியில் பதிவேற்றம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.
மலைவாழ் குடியிருப்புகளை சாா்ந்த உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிராமசபை கூட்டங்கள் நடத்தி, இத்திட்டம் குறித்து முழு விவரத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.