குருநாத சுவாமி கோயில் திருவிழா: பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பொதுமக்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள குருநாத சுவாமி கோயில் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் மூலவா் குருநாதசுவாமி, பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகா், படா்ந்தபுளி கற்பக விநாயகா் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால் குடம் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் குருநாத சுவாமி கோயிலிலிருந்து பால் குடங்களை எடுத்து முக்கியத் தெருக்களில் வழியாக ஊா்வலமாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனா். பின்னா், பக்தா்கள் அலகுக் குத்தியும், சிறுவா்கள் உடலில் சேறுபூசி சேத்தாண்டி வேடம் அணிந்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனா்.