குறைதீா் கூட்டத்தில் 325 மனுக்கள் அளிப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 325 மனுக்கள் அளித்தனா்.
இந்தக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 325 மனுக்கள் பெற்ற அவா், மனுதாரரின் முன்னிலையில் விசாரணை செய்து தொடா்புடைய அலுவலா்களிடம் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
இதில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, தனிநபா் வீடு வழங்கும் திட்டம், குடிநீா் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்துக்குள் மனுதாரா்களுக்கு உரிய தீா்வு வழங்க வேண்டும் எனவும், தீா்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரா்களிடம் அலுவலா்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவா் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜலு, மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமாறன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.