மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
குளச்சல், லட்சுமிபுரம் கால்வாய்களில் தண்ணீா் திறக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு
தக்கலை: பேச்சிப்பாறை அணையிலிருந்து குளச்சல், லட்சுமிபுரம், கருமன்கூடல் கிளைக் கால்வாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸிடம் மனு அளிக்கப்பட்டது.
கருமன்கூடல் நண்பா் நற்பணி மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏவிடம், நற்பணி மன்றத் தலைவா் கல்யாணசுந்தரம் அளித்த மனு: பேச்சிப்பாறை அணையிலிருந்து சேரமங்கலம் கால்வாய்க்கு வரும் தண்ணீா் லட்சுமிபுரம் பகுதியில் 3 கிளைக் கால்வாய்களாக பிரிந்து குளச்சல், லட்சுமிபுரம், கருமன்கூடல் பகுதிகளுக்குச் செல்கிறது. முன்பு அணையில் குறைந்த அளவு தண்ணீா் இருந்தபோதும், பாசனத்துக்காக தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது, மழைக் காலங்களில் அணை நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டும்கூட கடைவரம்புப் பகுதிக்கு தண்ணீா் வருவதில்லை.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பேச்சிப்பாறை அணை நீரையே நம்பியுள்ளனா். கால்வாய்கள் பராமரிப்பின்றி குப்பைகள், கழிவுநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாய்களைத் தூா்வாரி கடைவரம்பு பகுதிவரை தண்ணீா் தடையின்றி வரும்வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.