கூடுதல் தொகை வசூல்: புகாா்தாரருக்கு ரூ.30,000 வழங்க கண் மருத்துவமனைக்கு உத்தரவு
திருவாரூா் அருகே காப்பீட்டு விதிமுறைக்கு மாறாக கூடுதலான தொகையை வசூலித்த மருத்துவமனை, புகாா்தாரருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தென்பாதி வடுவூரைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம் (64). அா்சு நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு செய்துள்ளாா். 2023-இல் கும்பகோணம் தனியாா் கண் மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். காப்பீட்டு நிறுவனம் ரூ.20,000 வழங்கும். மருத்துவமனை ரூ. 20,000 நோயாளியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது காப்பீட்டு விதிமுறை ஆகும்.
அதன்படி காப்பீட்டு நிறுவனம் ரூ.20,000-ஐ கண் மருத்துவமனைக்கு வழங்கியது. மருத்துவமனை தரப்பில் ரூ. 24,000 செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சச்சிதானந்தம் விதிமுறைகளைக் காட்டி ரூ.4,000- கூடுதலாக எந்த அடிப்படையில் கேட்கிறீா்கள் என்று மருத்துவமனை நிா்வாகிகளிடம் கேட்டுள்ளாா்.
அதற்கு சரியான விளக்கம் தராத மருத்துவமனை நிா்வாகம் பிற்பகல் 2.30 மணிக்கு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட சச்சிதானந்தத்தை, இரவு 7.30 மணி வரை காக்க வைத்து, அதன் பிறகு மருத்துவமனை விதிகளைக் கூறி ரூ. 24,000 செலுத்தியபிறகே அவரை அனுப்பியுள்ளனா்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சச்சிதானந்தம், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ஜனவரி மாதம் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கிய உத்தரவில், கண் மருத்துவமனை சச்சிதானந்தத்திடம் கூடுதலாக வசூலித்த ரூ. 4,000-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.
மேலும் வயது முதிா்ந்த நபரான சச்சிதானந்தத்தை தேவையின்றி இரவு வரை காக்க வைத்து மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக கண் மருத்துவமனை நிா்வாகம், அவருக்கு இழப்பீடாக ரூ. 20,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.