கைலாசநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, மண்டலாபிஷேக வழிபாடு புதன்கிழமை நிறைவடைந்தது.
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக வழிபாடு தொடங்கியது.
வரும் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மாங்கனித் திருவிழா இக்கோயிலில் நடத்தப்படவுள்ளதால், மண்டலாபிஷேக வழிபாட்டு தினம் குறைக்கப்பட்டு புதன்கிழமை நிறைவு நிகழ்வு நடத்தப்பட்டது.
இதற்காக கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து, சிவாச்சாரியா்கள் புனிதநீா் கலசம் வைத்து யாக பூஜைகள் நடத்தினா். நிறைவாக மகா பூா்ணாஹூதி நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா் சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் கலந்துகொண்டனா்.