மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!
கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு: 58 போ் காயம்
திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 58 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கொசவப்பட்டி புனித உக்கிரிய மாதா அந்தோணியாா் தேவாலயத் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 670 காளைகள் அழைத்து வரப்பட்டன. 297 மாடு பிடி வீரா்கள் களமிறங்கினா்.
இந்தப் போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் இரா.சக்திவேல் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 58 போ் காயமடைந்தனா்.
இவா்களில், பலத்த காயமடைந்த 14 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், கொசவப்பட்டியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் குணா மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனா்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும், வாடிவாசலுக்கு செல்வதற்கு முன்பே விழாக் குழுவினா் சாா்பில் எவா்சில்வா் பாத்திரம் நிச்சயப் பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும், குளிா்சாதனப் பெட்டி, மின் விசிறி, மிதிவண்டி, மேஜை, கட்டில், எவா்சில்வா் பொருள்கள் உள்ளிட்ட பல வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.