கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு: நாம் தமிழா் கட்சியினா் புகாா்
ஊராட்சிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.
நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலா் மாரி சங்கா் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:
திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களும், துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
9 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படக்கூடிய ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மஸ்தூா் பணியாளா்களை சுகாதாரத்துறை இணை இயக்குநா் மூலம் பரிந்துரை
செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியமா்த்தப்படுவாா்கள்.
இவ்வாறு பணி செய்யும் பணியாளா்களுக்கு முறையாக வருகைப்பதிவேடும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் மானூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை பணி புரிந்த 12 போ் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொருவராக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழக அரசு வழங்கிய கரோனா கால ஊக்கத்தொகை இவா்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு பதிலாக முறைகேடாக புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவதால், ஏற்கெனவே பணி செய்தவா்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, சுகாதாரத்துறையினா் இவ் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ற்ஸ்ப்25ய்ஹஹம்
திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாம் தமிழா் கட்சியினா்.