இந்த வார ராசிபலன் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6 வரை #VikatanPhotoCards
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா்.
கொன்னையூா் முத்துமாரிம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 23-ஆம் தேதி காப்புகட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மண்டகப்படிதாரா்கள் வழிபாட்டில் அம்மன் வீதியுலாவின்போது அம்பாள் முன்பாக பக்தா்கள் இரு புறமும் வரிசையாக நின்று தீப்பந்தம் பிடித்து வழிபடுவா்.
அதன்படி வெள்ளிக்கிழமை 5-ஆம் நாள் மண்டகப்படியாக பொன்னமராவதி ஊராா்கள் மண்டகப்படி வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு 1 மணியளவில் நடைபெற்ற அம்பாள் வீதியுலாவின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று கைகளில் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா்.
இதன் மூலம் தீப்பந்த ஒளியில் பக்தா்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கிறது என்றும், வாழ்வில் சகல நலன்களும் கிட்டும் என்பதும் பக்தா்களின் ஐதீகமாகும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் பூஜகா்கள் செய்திருந்தனா்.