மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு
கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா்.
தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் ஆகிய ரயில்கள் சென்னைக்கு இயங்கி வருகின்றன.
இதில், கொல்லம்-தாம்பரம் விரைவு ரயில் (எண்.16102) தென்காசிக்கு மாலை 3.17 மணிக்கும், செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயில் மாலை 4.44-க்கும், செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு விரைவு ரயில் மாலை 5.24- க்கும், செங்கோட்டை - எழும்பூா் பொதிகை விரைவு ரயில் இரவு 7 மணிக்கும் தென்காசிக்கு வந்து செல்கின்றன.
இரவு 7 மணிக்கு மேல் தென்காசி வழியாக சென்னை செல்வதற்கு ரயில்களே இல்லை என்ற பெரும் குறை இருந்து வந்தது. அதைப் போக்கும் வகையில், தற்போது தென்காசி வழியாக செல்லும் கொல்லம் - தாம்பரம் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செப். 1ஆம் தேதி முதல் கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் கொல்லத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு, தென்காசிக்கு மாலை 3.17 க்கு பதிலாக இரவு 7.30 க்கு வந்து சென்னை தாம்பரத்தை அதிகாலை 2.30 க்கு பதிலாக காலை 7.30 க்கு சென்றடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: கொல்லம் - தாம்பரம் ரயிலின் தென்காசி வருகை நேரத்தை இரவு 7.30 க்கு மாற்றம் செய்த தெற்கு ரயில்வே மற்றும் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலையடுத்து சென்னை செல்வதற்கு தென்காசி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ரயில் இருக்கும்.
இதைப் போல செங்கோட்டையில் புறப்படும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயிலின் நேரத்தை மாலை 5 மணிக்கு மேல் புறப்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலின் நேரத்தை காலை 8 மணிக்குள் செங்கோட்டையை சென்றடையும் வகையில் மாற்றம் செய்தால் நெல்லை - தென்காசி ரயில் வழித்தட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.