கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து
கொல்லிமலையில் மின்தடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி: 2 நாள்களுக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு 2 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனா்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கொல்லிமலைக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் வாகனங்களில் தங்களுடைய குடும்பத்தினருடன் கொல்லிமலைக்கு வந்து இங்குள் குளுகுளு சீசனை அனுபவித்து செல்கின்றனா்.
கடந்த சில நாள்களாக கொல்லிமலை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளைவிட்டு வெளியே வராமல் இருந்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்று, மழையால் சோளக்காட்டில் இருந்து செம்மேடு செல்லும் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தன.
இதனால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. விடுதிகளில் தங்கியிருந்தோா் குளிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் தண்ணீா் வராததால் தவிப்புக்குள்ளாகினா். இரவு நேரத்தில் இருள்சூழ்ந்த அறைகளில் நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடா்ந்து காளப்பநாயக்கன்பட்டி மின்வாரிய அதிகாரிகள் கொல்லிமலைக்கு சென்று அறுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனா். மின்தடை ஏற்பட்டதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டனா். இரண்டு நாள் சீரமைப்பு பணிகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சிகளுக்கும், காளப்பநாயக்கன்பட்டி, மெட்டாலா துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு சோளக்காடு, செம்மேடு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் தொடா் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பணியாளா்கள் இறங்கி மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி அவற்றை சரிசெய்தனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மின் விநியோகம் சீரானது என்றனா்.