4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
நாமக்கல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,599 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 1,599 அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி வழங்கப்படுகிறது.
குறிப்பாக 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையங்களில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப்பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பாடம் கற்றுத்தரப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடல், பாடலும் கற்றுத்தருகின்றனா். மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளிச் செல்வதற்கு அவா்கள் தயாா் செய்யப்படுகின்றனா்.
அங்கன்வாடி பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குழந்தைகள் சோ்க்கைப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இருப்பின் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்க வேண்டும். அங்கேயே ஆதாா் அட்டை வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.
இந்த சேவையைப் பெற்றோா் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.