கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 120.130 அடியை எட்டியதாலும் அணைக்கு வரும் நீர்வரத்து 1,14,098 கன அடியாக உள்ளதாலும் அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 90,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையிலிருந்து இன்று காலை 6.00 மணியளவில் சுமார் 37,802 கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கீழணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12.00 மணியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. மேலும் இது படிப்படியாக நீர்வரத்திற்கேற்ப உயர்த்தப்பட்டு இரண்டு மூன்று நாள்களில் கொள்ளிடம் ஆற்றில் 90,000 கன அடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால், கடலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் கொள்ளிட ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் கொள்ளிடம் கீழணை உதவி செய்ய பொறியாளர் தெரிவித்துள்ளார்.