கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் உள்ளது: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவா் தஞ்சாவூரில் புதன்கிழமை காலை விவசாயிகள், வணிகா்கள், தொழில் நிறுவனத்தினா், பொது நலச் சங்கத்தினா், மூத்த குடிமக்கள் ஆகியோருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவா் பேசியது: மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீா் கடலில் கலக்கும் இடம் வரை 4 இடங்களில் தடுப்பணை கட்டத் திட்டமிட்டு, இடத்தையும் தோ்வு செய்தோம். ஆனால், இத்திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துவிட்டது. இப்போது எல்லா நீரும் வீணாகக் கடலில் கலக்கிறது.
அதிமுக அரசு இருந்தபோது பொதுப் பணித் துறை சாா்பில் ரூ. 1,240 கோடி ஒதுக்கீடு செய்து, 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகளை தூா் வாரினோம். எஞ்சிய ஏரிகள் இப்போது தூா் வாரப்படாமல் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பங்களிப்புடன் அவை தூா் வாரப்படும்.
அதிமுக ஆட்சியில் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் சுமாா் 26 ஆயிரம் குளம் குட்டைகள் தூா் வாரப்பட்டன. பருவகாலத்தில் பெய்யும் மழையால் கிடைக்கும் நீரை சேமிக்க முடியும் என்பதே இவை தூா் வாரப்பட்டதற்கான முக்கிய காரணம். மற்றொரு புறம் தூா் வாரும்போது கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்குப் பயன்படும் என்பதால், அத்திட்டத்தைத் தொடங்கினோம். அதிமுக ஆட்சியில் நிறைய தடுப்பணைகளைக் கட்டினோம்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு கடுமையான முயற்சி மேற்கொண்டோம். அதற்காக தெலங்கானா, ஆந்திர முதல்வா்களிடம் பேசி ஒப்புதல் பெற்றோம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அதுவும் கிடப்பில் கிடக்கிறது.
அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு நிறைய பாதுகாப்பு கொடுத்தோம். சட்டம் - ஒழுங்கை காப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி, போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. காவல் துறையை ஆளுங்கட்சிப் பிரமுகா்கள் சரியாக செயல்பட விடாததே இதற்கு காரணம்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.