நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
கோதையாறு பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு, பின்னா், நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 313 இ, கன்னியாகுமரி - கோதையாறு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலையும் மலையையும் இணைக்கும் பேருந்து சேவை என்று கூறப்படும் அளவுக்கு, கன்னியாகுமரி முனையிலிருந்து, மலைப் பகுதியான கோதையாறு பகுதிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 2 இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்தப் பேருந்து மூலம் கோதையாறு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள், அரசு ரப்பா் கழக குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளா்கள், கோதையாறு மின் நிலையங்களில் பணி புரியும் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள் என பல்வேறு தரப்பட்ட பயணிகள் பயனடைந்து வந்தனா். குறிப்பாக, மலையோரப் பகுதி பழங்குடி மாணவா்களும், பிற மாணவா்களும் நாகா்கோவில் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று படிப்பதற்கு இந்த பேருந்து சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
இதே போன்று, ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் நோயாளிகளுக்கும், திற்பரப்பு, கோதையாறு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
கோதையாறு சாலையானது பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடந்ததால் இந்த தடத்தில் செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதானதால் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அப்போது, பழங்குடி மக்கள், ரப்பா் கழக தொழிலாளா்கள் என பல்வேறு தரப்பினா் தொடா் கோரிக்கை வைத்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கோதையாறு சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்தப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகமும், போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி மக்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.