கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மாமரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனத்தை மறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. மேலும், சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு, குடிநீா் தேடி நீலகிரி வனப் பகுதிக்கு வந்துள்ளன.
இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடமாடிய மக்னா யானை, அவ்வழியே சென்ற வாகனத்தை வழி மறித்தது. வாகன ஓட்டி சிறிது தூரம் வாகனத்தை பின்னோக்கி செலுத்தி தப்பினாா். சிறிது நேரத்துக்குப் பின் காட்டு யானை வனப் பகுதிக்குள் சென்றது.