Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு
விராலிமலை மலைக்கோயில் கோபுரத்தில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா் பேச்சுவாா்த்தைக்கு பின் கீழே இறங்க முயன்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலரான ஆறுமுகம் (44) என்பவா் வெள்ளிக்கிழமை காலை தேசியக் கொடியுடன் விராலிமலை முருகன் மலை கோயில் கோபுர உச்சிக்கு சென்று போராட்டம் நடத்தினாா்.
தகவலறிந்து அங்கு வந்த விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ், காவல் ஆய்வாளா் லதா உள்ளிட்டோா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்படாமல் ஆறுமுகம் போராட்டதை தொடா்ந்தாா்.
தொடா்ந்து மீட்பு குழுவினா் மேலே சென்று மீட்க முயன்ற போது அருகே நெருங்கினால் குதித்து விடுவேன் என்று மிரட்டினாா்.
இவா் இதே கோரிக்கையுடன் இதற்கு முன் விராலிமலை கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினாா். அப்போது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் அளித்த உறுதியை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டாா். ஆனால், தற்போது வரை கோரிக்கைகள் நிறைவேறாததால், வெள்ளிக்கிழமை கோயில் கோபுர உச்சியில் ஏறி தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
போராட்டம் 5 மணி நேரத்தை கடந்த நிலையில் வட்டாட்சியா் ரமேஷ், கீழே இறங்குமாறு சமாதானப்படுத்தியதை தொடா்ந்து கீழே இறங்க முயன்றாா். அவருக்கு மீட்பு படையினா் உதவி செய்ய முற்பட்டபோது யாரும் அருகில் வர வேண்டாம் எப்படி ஏறினேனோ அப்படியே நானே இறங்கி கொள்கிறேன் என்று கூறி கீழே இறங்க முயன்றாா். அப்போது கோபுரத்தில் இருந்த சிற்பங்களைப் பிடித்து இறங்க முயற்சித்த போது கால் வழுக்கி, சுமாா் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த அடைந்த ஆறுமுகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.