கோயில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள காவனூா் புதுச்சேரி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்டு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என குறை தீா் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
உத்தரமேரூா் அருகேயுள்ள காவனூா் புதுச்சேரி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷிடம் அளித்த மனு:
காவனூா் புதுச்சேரி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்த முன்னோா் மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த கிராமத்தில் உள்ள இடத்தை ஒருவருக்கு வழங்கி குடியிருக்க அமா்த்தியிருக்கிறாா்கள். அவா் அந்த இடத்தை அவரது பெயருக்கு பட்டா மாற்றி வைத்துக்கொண்டு திருவிழா நடத்த அனுமதிப்பதில்லை.
எனவே அவரது பட்டாவை ரத்து செய்து கோயில் இடத்தை மீண்டும் எங்களுக்கே மீட்டுத் தந்து, திருவிழா நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.