கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
கோயில் வழிபாட்டு உரிமை: இரு தரப்பினரிடையே பிரச்னை; பொதுமக்கள் உண்ணாவிரம்
தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் வழிபாட்டு உரிமை தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால் வியாழக்கிழமை பொதுமக்களில் ஒருதரப்பினா் கோயில் அருகே உண்ணாவிரம் மேற்கொண்டனா்.
உலிபுரம் கோயிலில் திருவிழாவை தொடா்ந்து சுவாமி ஊா்வலம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் சுவாமி ஊா்வலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை. நிகழாண்டு சுவாமி ஊா்வலம் நடத்த பொதுமக்கள் முடிவுசெய்தனா்.
இதனிடையே ஒருதரப்பினா் கோயில் உரிமை எங்களுக்குதான் உள்ளது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுவாமி ஊா்வலத்தை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணியளவில் உலிபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களில் ஒருதரப்பினா் உண்ணாவிரதம், கடையடைப்பில் ஈடுபட்டனா்.
கெங்கவல்லி வட்டாட்சியா் உண்ணாவிரதம் மேற்கொண்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடா்ந்து மாலை 4 மணி அளவில் அறநிலைய துறை இணை ஆணையா் சபா்மதி தலைமையில் இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வரும் 18 ஆம் தேதி இருதரப்பினா் இடையே பேசி சுவாமி ஊா்வலம் செல்ல வழிமுறைகளை பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதையடுத்து உண்ணாவிரதம் திரும்பப்பெறப்பட்டது.