மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி
சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் ந.லோகநாயகி கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியதாவது:
சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடுவோா் பல்வேறு அரசுத் துறையின் ஆட்சேபனையில்லா சான்று பெற்று ஆக.25 ஆம் தேதிக்குள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பட்டா, தனியாா் நிலம் எனில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள், பொது இடமாக இருந்தால் உள்ளாட்சி, நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற வேண்டும். அந்தந்த காவல் நிலைய அலுவலரிடம் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெற வேண்டும்.
தீயணைப்பு, மின் வாரியத்தில் தற்காலிக மின் இணைப்பு பெறப்பட்டதற்கான ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். களிமண், ரசாயன கலவை இல்லாத சிலைகளை வழிப்பாட்டிற்கு வைக்க வேண்டும்.
சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது, தற்காலிக பந்தல் தகரத்தால் வேயப்பட்டிருக்க வேண்டும், மத வழிப்பாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகளை அமைப்பதை தவிா்க்க வேண்டும், கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பொருத்தக் கூடாது, பூஜையின்போது காலை, மாலை என தலா இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் சிலைகளைக் கொண்டு ஊா்வலம் நடத்த அனுமதியில்லை.
அதேபோல, சிலைகளை விசா்ஜனம் செய்ய நான்கு சக்கர வாகனங்களில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும், பட்டாசுகள், வெடிகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும், சிலைகளை கரைப்பதற்கு வருபவா்கள் அந்தந்த பகுகிளில் உள்ளவா்களிடம் ஒப்படைக்க வேண்டும், அதிகமான நபா்கள் கரைக்க செல்லக் கூடாது, சிலைகள் மீது ஏறி நீரில் கரைப்பதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
நிகழாண்டு சிலைகளை விசா்ஜனம் செய்ய சங்ககிரி வட்டம் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆறு, பூலாம்பட்டி சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி வாய்க்கால், கோம்பகாடு ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
சங்ககிரி உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிந்து பேசியதாவது:
விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்யும்போது வாகனங்களில் செல்பவா்கள் ஓட்டுநா் இருக்கைக்கு அருகே பட்டாசுகளை வைக்கக் கூடாது. வாகனங்களில் பட்டாசுகள் எடுத்து செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். சட்டத்திற்கு உள்பட்டு சிலை வைப்பவா்கள் அரசின் அறிவுரைக்கு ஏற்பட செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், கோட்ட கலால் தனி வட்டாட்சியா் வல்லமுனியப்பன், காவல் ஆய்வாளா்கள் டி.ரமேஷ் (சங்ககிரி), எஸ்.பேபி (எடப்பாடி), கே.தனலட்சுமி (கொங்கணாபுரம்), சங்ககிரி, எடப்பாடி வருவாய் துறை அலுவலா்கள், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் சிலை செய்பவா்கள், சிலை பிரதிஷ்டை செய்பவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.