திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
சண்டை நிறுத்தம் இருதரப்பு முடிவு: ஜெய்சங்கா் விளக்கம்
‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தமானது இருநாடுகளுக்குள் நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட முடிவாகும்’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து உரிமைகோரி வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மூன்று நாள் பயணமாக டென்மாா்க், ஜொ்மனி மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஜெய்சங்கா் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இந்நிலையில், நெதா்லாந்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவா், ‘இருநாடுகளுக்கிடையே மோதல் நிலவும்போது அதற்கு தீா்வுகாண உலகில் உள்ள பிற நாடுகள் முயற்சிசெய்வது இயல்பு. ஆனால் சண்டை நிறுத்தம் தொடா்பான இறுதி முடிவானது இந்தியா-பாகிஸ்தான் நேரடி பேச்சுவாா்த்தைக்குப் பின் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா மட்டுமின்றி எங்களை அழைத்துப் பேசிய நாடுகளிடம் ஒன்றை மட்டும் நாங்கள் கூறினோம். சண்டையை நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்பினால் அதை அவா்கள் எங்களிடம் நேரடியாக மட்டுமே கூற வேண்டும் என்றோம். அந்நாட்டு ராணுவ ஜெனரல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியை தொலைபேசியில் அழைத்து இதை தெரிவிக்குமாறு கூறினோம். அதன் பிறகே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை. பஹல்காமில் நடைபெற்றதைப் போல் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத தாக்குதல் நடத்த நினைத்தால் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் கடும் பதிலடி தரப்படும். ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்க இந்தியா தயாராகவுள்ளது’ என்றாா்.