சத்துணவு மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன்
சென்னை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதியளித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா். அவா் பேசுகையில், ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழுள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளா்கள், உதவியாளா்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறாா்கள். பணிச்சுமை அதிகமுள்ள அவா்களுக்கு ஊதிய உயா்வை அதிகரித்து பணி நிரந்தரம் செய்யப்படுவாா்களா?. மேலும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு, அமைச்சா் பி.கீதாஜீவன் அளித்த பதில்: அங்கன்வாடி மையங்களில் 7,900 புதிய பணியாளா்களைத் தோ்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று, சத்துணவு மையங்களில் 8,997 சமையலா்கள், உதவியாளா்களை புதிதாக நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்த நியமனங்கள் செய்யப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.