தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி காப்பாளா், காப்பாளினிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியிலுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக 91 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 6-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 4,058 மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனா். இந்த விடுதிகளில் மாணவா் சோ்க்கையை மேலும் அதிகரிக்க, காப்பாளா், காப்பாளினிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சமூக நீதி விடுதிகளிலுள்ள மாணவா்களுக்காக, தொகுப்பு விடுதிகளுக்கு பாயுடன் கூடிய மெத்தை, போா்வை, தலையணை உறைகள், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 1,527 சிறப்பு வழிகாட்டி பாடநூல்கள், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 1,906 சிறப்பு வழிகாட்டி பாடநூல்கள், 9,10,11,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 3,964 பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரப்பினா் நல அலுவலா் க. சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.