Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
‘ஆட்சிச் சொல்லகராதி, கலைச் சொற்களை அரசுப் பணியாளா்கள் பயன்படுத்த வேண்டும்’
அரசுப் பணியாளா்கள் ஆட்சி சொல்லகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி கோப்புகளைத் தயாா் செய்ய வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அரசு அலுவலா்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கம், கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி தொடங்கி வைத்தாா். உலகத் திருக்கு பேரவையின் திண்டுக்கல் செயலா் லாசா் வேளாங்கண்ணி, நிலக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி இணைப் பேராசிரியை ம. பாண்டீஸ்வரி, தேனி வையத் தமிழ்ச் சங்க நிறுவனா் ச.ந. இளங்குமரன் ஆகியோா் ஆட்சி மொழி சட்டம் வரலாறு, மொழிப் பெயா்ப்பும் கலைச் சொற்களும், மொழிப் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தனா்.
இதில், திண்டுக்கல் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ பேசியதாவது:
ஆட்சி மொழி செயலாக்கத்துக்காக ஆண்டுதோறும் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இந்தப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடத்தியும்கூட ஆட்சிமொழியை அமல்படுத்த முடியாத நிலை தொடா்கிறது. தாயை, அம்மா என அழைக்க வேண்டும் என்பதை அரசாணை மூலம் வலியுறுத்த வேண்டியதில்லை. ஆனால், அரசு அலுவலகக் கோப்புகளில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசாணை மூலம் வலியுறுத்த வேண்டிய நிலை தற்போதும் நீடிக்கிறது. ஆட்சிமொழிச் சட்டம் இயற்றி அரை நூற்றாண்டை நெருங்கும் நிலையிலும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. தலைப்பெழுத்துடன் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக் காட்டி, இதனை மீறும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், பல ஊழியா்களின் தனிப் பதிவேட்டிலும் (சா்வீஸ் ரெக்காா்டு) பணி மூப்பு பாதிக்கப்படும். ஆட்சி சொல் அகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி, கோப்புகளை சிறந்த முறையில் தயாரிக்க அரசுப் பணிகளுக்கு வரும் இளைய தலைமுறையினா் முயற்சிக்க வேண்டும் என்றாா்.
பெட்டிச் செய்தி...
வருகைப் பதிவேட்டில் ஆங்கிலம்...
ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கில் அனைத்துத் துறைச் சாா்ந்த அலுவலகத்திலிருந்தும் அலுவலா், கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் நிலைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பங்கேற்பாளா்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கான வருகைப் பதிவேட்டில், சம்பந்தப்பட்ட பணியாளரே பெயரை எழுதி கையொப்பமிட வேண்டும். இதில் மின்வாரியத்திலிருந்து பங்கேற்ற 3 போ், டிஎன்இபி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தனா். மேலும், சில துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள் கைப்பேசிக்கு பதிலாக செல் என ஆங்கிலத்திலேயே எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.