சாத்தான்குளம் அருகே தாய், மகன் மீது தாக்குதல்
சாத்தான்குளம் அருகே தாய், மகனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தை சோ்ந்த அப்பாட் ஞானம் மகன் சாமுவேல்காட்வின்(24). அப்பகுதியிலுள்ள அல்வா கடையில் வேலைசெய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பாக்யராஜ் மகன் ரவி(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தததாம்.
இந்நிலையில், ரவி, அவரது சகோதரா் நவீன், யோசுவா மகன் நெல்சன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த தனது நண்பா் சாமுவேல் என்பவரை சாமுவேல் காட்வின் கண்டித்தாராம்.
தங்களுடன் பேசுவதை கண்டிப்பதா எனக் கூறி, ரவி உள்ளிட்ட 3 பேரும் சாமுவேல்காட்வின் வீட்டுக்கு சென்று அவரைத் தாக்கியதுடன், தடுக்க வந்த அவரது தாயையும் அவதூறாகப் பேசி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும், வீட்டுக் கதவைவும் உடைத்து சேதப்படுத்தி சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரவி உள்ளிட்ட 3 போ் மீதும் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங்- போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.