சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்: 4 கிராமங்கள் துண்டிப்பு
மானாமதுரை அருகே சாலையை மூழ்கியவாறு செல்லும் வெள்ளத்தால் 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை ஊராட்சி தியானூா், சேதுராயனேந்தல், அரிமண்டபம், ராஜாக்கள் குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்கு மானாமதுரையிலிருந்து புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது.
இந்தக் கிராமங்களுக்கு செல்லும் வழியில் நாட்டாா் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்ட சிமென்ட் குழாய்களுக்கு மேல் சாலையை மூழ்கியவாறு வெள்ள நீா் செல்கிறது. இதனால் இந்த கிராமங்களுக்கு அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்தப் பகுதிகளிலிருந்து மானாமதுரைக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து அரிமண்டபம் கிராம மக்கள் கூறியதாவது: மானாமதுரையிலிருந்து அரிமண்டபம் வரை புதிய தாா்ச் சாலை அமைக்கப்படுகிறது. நாட்டாா் கால்வாயின் குறுக்கே சிமென்ட் குழாய்களை அகற்றிவிட்டு, இங்கு புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதியில் கால்வாய் பாலம் அமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.