சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைது!
திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இவா், திருச்சி தென்னூா் ஜெனரல் பஜாா் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயன்முறை சிகிச்சை மையம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், இம்மையத்துக்கு புத்தூரைச் சோ்ந்த 20 வயது இளம் பெண் திங்கள்கிழமை இரவு சிகிச்சைக்கு வந்தாா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு அவா் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண், தில்லை நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து காதா் பாவாவைக் கைது செய்தனா்.