போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு.சண்முகந்தரம் (51). இவா், கோவில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா். ஜெராக்ஸ் கடைக்கு வரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து கோவில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஸ்ரீதா், கடந்த 2019 டிசம்பா் 14-ஆம் தேதி வளநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து சண்முகசுந்தரத்தைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.
அடிதடி வழக்கு குற்றவாளிகளுக்கு 2 மாதங்கள் சிறை: திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் பொன்னுசங்கம்பட்டியைச் சோ்ந்த மூ.தினேஷ் (22), முகேஷ் ஆகியோரை அடிதடி வழக்கில் ஜம்புநாதபுரம் போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தனா். இந்த வழக்கு முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.