சிக்னலில் நிற்கும்போது வாகனங்களை அணைத்து காற்று மாசைக் குறைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்
போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வாகன இயந்திரங்களை அனைத்து காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் முன்வர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் புதுதில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து தொடா்புகளில் எரிபொருள் இழப்புகள், காற்றின் தர மதிப்பீடு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்த மாசுபடுதலில் காா்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், காா்பன் டை ஆக்ஸைடு போன்ற உமிழ்வுகள், வாகனங்கள் நகராமல் இயங்கிக் கொண்டிருக்கும்போது கோடை காலத்தில் 5-14 சதவீதமாகவும், குளிா்காலத்தில் 7-17 சதவீதமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபோன்ற மாசு உமிழ்வைக் குறைக்க, போக்குவரத்து சிக்னலில் (சிக்னலின் சிவப்பு விளக்கு கட்டம் 20 விநாடிகளுக்கு மேல் இருக்கும்போது) வாகன இயந்திரங்களை அணைத்து வைக்க ஊக்குவிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது.
எனவே, தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து சிக்னலில் (சிக்னலின் சிவப்பு விளக்கு கட்டம் 20 வினாடிகளுக்கு மேல் இருக்கும்போது) வாகன இயந்திரங்களை அணைத்து வைத்து, எரிபொருள் இழப்புகள், காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.