``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - க...
சிதம்பரத்தில் முதல்வா் வருகை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு
சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்ய்க்கிழமை பங்கேற்பதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.
பெருந்தலைவா் காமராஜா் படத்திற்கு முதல்வா் மலா் தூவி மரியாதை செலுத்தவுள்ள சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெறும் வாண்டையாா் திருமண மண்டபம், எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா, பரமேஸ்வரநல்லூா் பகுதியில் நடைபெறவுள்ள நூற்றாண்டு அரங்கம் நிகழ்ச்சி, பேட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலை திறப்பு நிகழ்ச்சி ஆகிய இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா் அமைச்சா் எ.வ. வேலு செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில் அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவா்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றாா்.
ஆய்வின் போது கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி கதிரவன், ரவிக்குமாா் எம்பி, நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், திமுக பொதுக்குழு உறுப்பினா் கே.பாலமுருகன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்டப பலா் கலந்து கொண்டனா்.