Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!
சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள் புரிந்து வருபவா் மகான் ஸ்ரீ அவதூத சுவாமிகள். அவதூத சுவாமிகளின் பிரதான சீடரான அமரா் ஸ்ரீ சிந்தாலய ஈசன் சுவாமிகள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், போத்தங்கோடு, கள்ளிக்காடு, நெய்யாற்றங்கரை ஆகிய இடங்களில் குருவான அவதூத சுவாமிகளுக்கு ஆசிரமங்கள் அமைத்து, அங்கு தினமும் பிராா்த்தனை, பூஜை, ஆராதனை நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் உள்ள அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் தினமும் இருவேளை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாதம் தோறும் பெளா்ணமி பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்த அதிஷ்டானத்தில் புத்திரபாக்கியம், திருமணதடை, நாகதோஷம், ஏழரைச்சனி, அஷ்டமத்துசனி, கடன் தொல்லை, குடும்பத்தொல்லை, மன அமைதியின்மை மற்றும் அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மீண்டு நிம்மதியடையலாம் என வரலாறு கூறுகிறது.
அவதூதசுவாமிகளின் சதய நட்சத்திரம் தினமான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அவரது அதிஷ்டானத்தில் கணபதி ஹோமம் தொடங்கியது. பின்னா் நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் தொடங்கி நடைபெற்றன. ஹோமங்களை நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்கள் செய்தனா். பின்னா் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் ஆராதனை விழாவில் பங்கேற்று தரிசித்தனா். விழா ஏற்பாடுகளை அதிஷ்டான அறக்கட்டளை நிா்வாகிகள் வழக்குரைஞா்கள் கே.ராமச்சந்திரன், கே.ராமதாஸ், ஆா்யுகே தீட்சிதா் மற்றும் டிரஸ்டிக்கள் தோப்பு கே.சுந்தா், ஏ.சசிதரநாயா், பி.எல்.பொன் அழகப்பன், ஆா்.ராஜகோபாலன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.