`சிறகடிக்க ஆசை டு பாஸ் (எ) பாஸ்கரன் ரிலீஸ் வரை' - அனுபவங்கள் பகிரும் குரு சம்பத்குமார்
ஹீரோக்களின் நண்பனாய் சந்தானம் காமெடியில் ரகளை செய்த படங்களுக்கு மீண்டும் மீண்டும் வரவேற்பை அள்ளும் சீஸன் இதுபோல. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'மதகஜராஜா' ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றதால், சந்தானத்துடன் இணைந்து நடிக்க ஹீரோக்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்யாவுடன் சந்தானம் அதள காமெடி பண்ணின 'பாஸ் (எ) பாஸ்கரன்' இப்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சின்னத்திரையில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக அறியப்பட்ட குரு சம்பத்குமார், தனது அமிர்தா பிலிம்ஸின் சார்பில் இதனைக் கொண்டு வந்திருக்கிறார். விஜய் டி.வி.யில் நம்பர் ஒன் மெகா தொடராக வரவேற்பை அள்ளி வரும் 'சிறகடிக்க ஆசை'யின் திரைக்கதை எழுத்தாளராகவும் புன்னகைப்பவர் குரு சம்பத்குமார்.

ராஜேஷ் எம். இயத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளியான் படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. ஐந்து வருடங்களாக பி.காம்., அரியர்ஸ் பாஸ் பண்ண முடியாத பாஸ்கரன் (ஆர்யா), வாழ்க்கையில் பாஸ் ஆகிறானா என்பதே படம். படிப்பு, அரியர்ஸ், வேலை, தங்கை கல்யாணம், குடும்பப் பொறுப்பு என்று அனைத்துக் கடமைகளுக்கும் 'பாஸ் பாஸ்' சொல்லித் தப்பிக்கும் ஆர்யா, நயன்தாராவுடனான காதலுக்குப் பிறகு ஒரே பாடலில் சிங்கமெனச் சிலிர்த்துச் சீறிக் கிளம்பி, சிகரம் தொடுகிறார். இந்த படத்தில் இடம்பெறும் 'நண்பேன்டா' சந்தானத்தின் ஆல் டைம் டிரெண்டிங் டயலாக் ஆகும். தொழில்நுட்ப மாற்றங்களுடன் வெளியாகும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து இங்கே மனம் திறக்கிறார் குரு சம்பத்குமார்.

''ஒரு பத்திரிகையாளராகத்தான் என்னோட கரியர் ஆரம்பமானது. சினிமா ஃபிலிமில் இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி காலங்களில் புதுப்படங்கள் என்பது சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் மட்டும்தான் வெளியாகும். லிபர்டி, வெலிங்டன், பிருந்தா, பிளாசா, சபையர்னு தியேட்டர்கள் இருந்த காலகட்டம் அது. மெயின் தியேட்டர்களில் இருந்து ரிலீஸ் செய்த புதுப்படங்களை வேறு தியேட்டர்களுக்கு திரையிடுவதை ஷிப்டிங் முறை என்பார்கள். அப்படி ஒரு வர்த்தகம் இருந்தது. அந்த ஷிப்டிங் முறையில் பல படங்களைத் திரையிட்டிருக்கேன்.
அந்த சமயத்துல தூர்தர்ஷன்ல தி.ஜானகிராமனின் 'வடிவேலு வாத்தியார்' கதையை திரைக்கதை எழுதி 14 வார தொடராகப் பண்ணினேன். அதன் பிறகு ஏ.வி.எம். நிறுவனத்திற்கு 'சொந்தம்', 'நம்பிக்கை' 'வாழ்க்கை'னு சிரீயல்களுக்கு எழுத ஆரம்பித்த பின், என் முழு கவனமும் சின்னத்திரையில் இருந்தது. 'அவர்கள்'., 'தென்றல்' 'இலக்கியா', 'சந்திரலேகா', 'இளவரசி' என நிறைய தொடர்களில் பிஸியானேன். 'இளவரசி'க்காக தமிழக அரசின் விருதும் கிடைத்தது. அதன்பிறகு இப்போது எழுதி வரும் 'சிறகடிக்க ஆசை' தொடருக்கு விஜய் டி.வி.யின் விருதும் கிடைத்தது. இப்படி சின்னத்திரையில் முழு கவனமும் செலுத்தியதால், சினிமா பக்கம் வராமல் இருந்தேன். இன்னொரு விஷயம், திரைப்பட விநியோகம் கார்ப்பரேட் ஆகிடுச்சு.

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கலகலப்பான படம். அப்படி என் மனசுக்கு பிடித்த படங்களை பார்க்கையில், நமக்கு பிடித்த வர்த்தகத்திலும் கவனம் செலுத்தணும்னு தோணிக்கிட்டே இருந்தது. அதனாலதான் இந்தப் படத்தைக் கொண்டு வந்திருக்கேன். இப்ப சினிமா ஆரோக்கியமா இருக்குது. கலகலப்பான படங்களுக்கு வரவேற்பு கிடைக்கறதால இந்தப் படத்தை கொண்டு வர்றேன்.

இந்த சமயத்துல என் மனைவிக்கும் நன்றி சொல்லிக்க விரும்புறேன். ஏன்னா, சிரீயல் வேலைகளோ, சினிமா விஷயங்களோ என்னோட வேலைகள்ல மட்டும் என்னால முழு கவனம் செலுத்த முடியறதுக்குக் காரணம், வீட்டை அவங்க கவனிக்கறதாலதான். அவங்களோடு ஒத்துழைப்பும், அன்பும், ஊக்குவிப்பும் இருக்கறதாலதான் இப்படி என்னால பல தளங்கள்ல இயங்க முடியுது. அதைப் போல, 'சிறகடிக்க ஆசை' தொடரின் நம்பர் ஒன் வெற்றி குறித்தும் நிறைய பேர் கேட்குறாங்க. கற்பனையை விட, யதார்த்தமான கதையாக இருப்பதாலும், ஒரு அருமையான டீம் ஒர்க் என்பதாலும்தான் இந்தத் தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைக்குது.'' என்கிறார் குரு சம்பத்குமார்.