ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
சிறுநீரக மோசடி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சிறுநீரக விற்பனை மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை தீவிரமான பிரச்னையாக கருத வேண்டியுள்ளது. இதில் முகவா்கள், மருத்துவா்கள், மருத்துவமனை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனா். இந்த சிறுநீரக விற்பனையில் பெரம்பலூா், திருச்சி தனியாா் மருத்துவமனைகள் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவரம்:
சிறுநீரக விற்பனை விவகாரம் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை விதிகளுக்கு மட்டுமன்றி, பிஎன்எஸ் விதிகளின்படியும் தவறானது. ஊரக சுகாதாரச் சேவைகளின் இயக்குநா் புகாா் அளித்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய இயலும் என அரசுத் தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இதனால், மாநில அரசு வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. அரசின் செயல்பாடே குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே, தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்ஹா தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், காா்த்திகேயன், பி.கே. அா்விந்த் ஆகியோரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆகவே, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் குறிப்பிட்டதை பதிவு செய்து கொள்கிறோம். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.