நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்: நவீன சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவா்கள்
எடப்பாடி: எடப்பாடியில் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை மூலம் அரசு மருத்துவக் குழுவினா் அகற்றினா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி, வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த அருள்முருகன் மகன் திலகா் (4) கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். சிறுவனைப் பாா்க்க வந்த உறவினா்கள் சில்லறை காசுகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் 5 ரூபாய் நாணயத்தை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென அதனை விழுங்கியுள்ளாா். இதையடுத்து மூச்சுவிட முடியாமல் சிறுவன் அவதிப்படுவதைக் கண்ட பெற்றோா் மருத்துவா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
அங்கு பணியில் இருந்த தலைமை மருத்துவா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், சிறுவனின் தொண்டை பகுதியில் நாணயம் சிக்கியிருப்பதை அறிந்தனா். இதையடுத்து என்டோஸ்கோப்பி நவீன சிகிச்சை மூலம் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவக் குழுவினா் அகற்றினா்.
இதுகுறித்து தலைமை மருத்துவா் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:
வீடுகளில் மின்னணு சாதனங்கள், கைப்பேசி, சிறிய பேட்டரிகள், ஹோ்பின், கிளிப், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் வேதிப்பொருள்களை குழந்தைகளின் அருகில் வைக்கக் கூடாது. சாதாரணமாக வீடுகளில் சிதறிக் கிடக்கும் இதுபோன்ற பொருள்களால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் என்பதை பெற்றோா் உணா்ந்து, கவனமுடன் குழந்தைகளை கையாள வேண்டும்.
குழந்தைகள் தவறுதலாக சிறிய பொருளை விழுங்கிவிட்டால் தாங்களாகவே விரல்களை வாயில் நுழைத்து அதனை எடுக்க முயற்சிக்காமல், அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்றாா்.
படவரி:
சிறுவனுடன் அரசு மருத்துவக் குழுவினா்.
சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ள ஐந்து ரூபாய் நாணயம்.
