போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமேஷ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழக சிறைத் துறையில் 2-ஆம் நிலை ‘வாா்டராக’ கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தேன். அரசுப் பணியாளா் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றுபவா்களை இடமாறுதல் செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது.
இந்த நிலையில், என்னை திருமயம் கிளைச் சிறைக்கு பணியிட மாறுதல் செய்து 3 ஆண்டுகள்கூட முடியவில்லை. என் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் நிலுவையில் இல்லை. இருப்பினும், கோவை சிறைக்கு என்னை பணியிட மாற்றம் செய்தனா்.
எனவே, கோவை சிறைக்கு என்னை பணியிட மாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவையும், திருமயம் கிளைச் சிறையிலிருந்து என்னை விடுவித்து சிறைக் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், புதுக்கோட்டை மாவட்ட சிறை நிா்வாகத்தின் கீழ் மனுதாரா் ஒரே இடத்தில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இதனால், அவா் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவு:
தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.