நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு பக்தா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை, ஓய்வறை, சமையலறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் சிவகங்கை மாவட்ட இணை ஆணையா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக ரூ. 11.75 கோடியில் திட்டம் தயாா் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் உரிய முடிவெடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.