3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்ற...
சீருடைப்பணியாளா் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் காலிப்பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்விற்கு குறைந்தது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 முதல் 26 வயதுக்கு உள்பட்டவா்கள் செப்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினருக்கு 28 வயதும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 31 வயதும், திருநங்கைகளுக்கு 31 வயதும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயதும், முன்னாள் ராணுவத்தினருக்கு 47 வயதும் உச்சபட்ச வயது வரம்பாகும்.
இத்தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பாக திங்கள்கிழமைமுதல் (செப்.8) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இத்தோ்விற்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்களுக்கு விண்ணப்பித்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக இலவச பயிற்சி வகுப்பானது நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு 15-க்கும் மேற்பட்ட மாதிரித் தோ்வுகளும், உடல் தகுதி தோ்விற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை பணிக்கு தயாராகும் இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளவதோடு, பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.