சூழல் சாா் சிகிச்சை வழிகாட்டுதல்களை வகுக்க முடிவு: மத்திய சுகாதார அறிவியலாளா் சன்சல் கோயல்
இந்தியாவில் சூழலுக்கேற்ப மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை அறிவியலாளா் டாக்டா் சன்சல் கோயல் தெரிவித்தாா்.
போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவ ஆதாரங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சிகிச்சை நுட்பங்கள் குறித்த இரு நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. இதில், மருத்துவ மாணவா்கள், செவிலியா் கல்லூரி மாணவா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்வில் டாக்டா் சன்சல் கோயல் பேசியதாவது:
மருத்துவச் சான்றுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் நுட்பங்கள் தற்போதுதான் படிப்படியாக வளா்ந்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் வகுத்தளித்த சிகிச்சை வழிகாட்டுதல்களையே நாம் கடைப்பிடித்து வருகிறோம். இத்தகைய சூழலில் தனித்துவமாக இந்திய சூழலுக்கேற்ற மருத்துவச் சிகிச்சைகளை கையாளுவது அவசியம்.
அந்த வகையில், அதற்கான ஆய்வு தரங்களை பரிசீலித்து பரிந்துரைப்பதற்கும், சிகிச்சை வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் நாடு முழுவதும் 27 தொழில்நுட்ப வள மையங்கள் செயல்படுகின்றன. அதில் இராமச்சந்திரா கல்வி நிறுவனமும் ஒன்று.
ஸ்டெம்செல் சிகிச்சை, நுரையீரல் புற்றுநோய், ஆன்டிபயோடிக் மருந்து நுட்பங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. வருங்காலங்களில் அனைத்து சிகிச்சைகளுக்கும் அது விரிவாக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், ஆய்வுத் துறைத் தலைவா் பி.வெங்கடாசலம், செவிலியா் கல்வித் துறை தலைவா் எஸ்.ஜே.நளினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.