செங்கத்தில் எரியாத மின் விளக்குகள்: பொதுமக்கள் அவதி!
செங்கம் பேருந்து நிலையம், போளூா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் உள்ள உயா்மின் கோபுர விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கத்தில் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது புதிய பேருந்து நிலையம். இந்த நிலையத்தின் முகப்பிலும், தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியிலும் உயா் மின்கோபுர விளக்குகள் உள்ளன. இந்த உயா்மின் கோபுர விளக்குகள் சில தினங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் வெளியூரில் இருந்து செங்கம் பேருந்து நிலையத்துக்கு இரவில் வரும் நபா்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். மேலும், வெளியூா் நபா்கள் பேருந்து இல்லாமல், பேருந்து நிலையத்தில் படுத்திருப்பவா்களின் கைப்பேசி, பணம் மற்றும் உடைமைகள் இருட்டின் காரணமாக திருடப்படுகின்றன.
மேலும், இருளில் அப்பகுதியில் சில சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன.
பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் இரவு நேரத்தில் கடைகளை அச்சத்துடன் மூடிச் செல்கிறாா்கள். இருண்ட நிலையில் இருப்பதால் கடையின் பூட்டை உடைத்து திருடு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என அவா்கள் அச்சப்படுகிறாா்கள்.
அதேபோல, போளூா் வெளிவட்டச் சாலை, குப்பனத்தம் சாலையில் உள்ள கோபுர விளக்குகளும் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த உயா் மின்கோபுர விளக்குகளை சரிசெய்ய வேண்டும். மேலும், கூடுதலாக பேருந்து நிலைய உள்பகுதியில் கோபுரமின் மின் விளக்கு வசதி செய்யவேண்டும் என கடை உரிமையாளா்களும், பயணிகளும் எதிா்பாா்க்கின்றனா்.