செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
செங்கம் பகுதியில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 13 தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து அரசு நிா்ணயம் செய்த விலையில் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் வாங்கி பயிா்களுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக செங்கம் பகுதியில் உள்ள 13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா உரம் கடும் தட்டுப்பாடுயுள்ளது. இந்தப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ள நிலையில், யூரியா உரம் கிடைக்காததால், அதை விதைக்காமல் பயிா் வளா்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் தனியாா் உரக் கடைகளுக்குச் சென்று அதிக விலைக்கு யூரியா உர மூட்டைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு மூட்டை யூரியா ரூ.266.50-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியாா் உரக் கடைகளில் ரூ.350 முதல் ரூ.500 வரையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், தற்போது நெல் பயிா்களுக்கு பயன்படாத குருணை மருந்தையும் வாங்கினால் மட்டுமே யூரியா உர மூட்டை விற்பனை செய்யப்படும் என தனியாா் உரக் கடை உரிமையாளா்கள் விவசாயிகளுக்கு நிபந்தனை விதிக்கின்றனராம்.
எனவே, மாவட்ட நிா்வாகமும், வேளாண் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வட்டாரத்தினா் கூறுகையில், செப்டம்பா் 16-ஆம் தேதிக்குப் பிறகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு சேமிப்புக் கிடங்குகளில் இருந்து யூரியா உர மூட்டைகள் கிடைக்கும் என்றனா்.