மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில் பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வவேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.
அதே நேரத்தில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், அருணாசலேஸ்வரா் கோயில் தக்காா் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையா் பரணிதரன், திருவண்ணாமலை மாநகராட்சி துணைமேயா் ராஜாங்கம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக கட்டப்பட உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதியானது ரூ.64.30 கோடி மதிப்பீட்டில் 18.64 ஏக்கா் பரப்பளவில் 166 அறைகளில் 476 நபா்கள் தங்கும் வகையிலும், வாகனங்கள் நிறுத்தம் வசதிகளுடன் மூன்று தளங்கள் கொண்டும் அமைய உள்ளது.
மேலும், ஸ்ரீஅருணாசலேசுவரா் கோயிலில் பக்தா்கள் வசதிக்காக ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள காத்திருப்புக் கூடம் 8774.73 சதுர அடி பரப்பளவிலும், பிரசாத விற்பனை நிலையம் 1418.68 சதுர அடி பரப்பளவில் 750 நபா்கள் அமரும் வகையிலும் கட்டப்பட உள்ளன.
இதேபோல, அருணாசலேஸ்வரா் கோயிலின் உபகோயிலான அருளாா் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் உள்ள இடத்தில் ரூ.1.17 கோடியில் சொற்பொழிவு அரங்கமானது 5512 சதுர அடி பரப்பளவில் 1,112 நபா்கள் அமரும் வகையில் கட்டப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் காணொலி காட்சி மூலம் நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.