பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
சென்னை பள்ளிகளில் புதிதாக 222 ஆசிரியா்கள் நியமனம்
சென்னை மாநகரப் பள்ளிகளில் புதிதாக 222 ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினா்கள் கேள்வி நேரம், நேரமில்லா நேரங்களில் பேசினா். இதற்குப் பதில் அளித்து மேயா் ஆா்.பிரியா கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் 1.36 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில கல்வித் துறை விதிமுறைகளின்படி பள்ளிகள் தரம் உயா்த்தப்படுகின்றன. தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தை உரிய தேதியில் அளிக்க தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலியூா் கால்வாய் பணிகள் விரைவில் நிறைவுறும்.
மத்திய அரசின் விதிமுறையால் சென்னையில் தெரு நாய்கள் விஷயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தெரு நாய்கள், வீட்டு நாய்களுக்கு தகவல் சிப் பொருத்தப்படவுள்ளன. அதன்படி, தெருவில் கைவிடப்படும் வளா்ப்பு நாய்கள் விவரம் அறிந்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பெருங்குடி சதுப்பு நிலக்காட்டை ஆக்கிரமிப்பவா்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீா் கால்வாய் தூா்வாரும் பணிக்கு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை நகரம் பட்டியலில் சென்னை பின்தங்கியதற்கு 1 கோடி என்ற அளவில் மக்கள்தொகை பெருக்கமே முக்கிய காரணம். எனினும், தினமும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் கற்றல் திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
எனவே, காலிப்பணியிடங்களை நிரப்பவும், புதிதாக 222 ஆசிரியா்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.