சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையே ரயில் போக்குவரத்து: புதுவை ஆளுநரிடம் மனு
சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோா் ராஜ் நிவாஸில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: புதுச்சேரி வளா்ச்சிக்கும், மக்கள் பயன்பாட்டுக்கும் ஏதுவாக சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் தண்டவாளம் அமைத்து ரயில் போக்குவரத்து சேவையை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞா்களுக்கு உதவும் வகையில், புதுச்சேரியில் பணியாற்றும் வகையில் தொழில்நுட்பப் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும்.
புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்க வேண்டும். கவிஞா் பாரதிதாசன் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் மக்களுக்கு இடையூறும், நெருக்கடியும் இல்லாத வகையில் போக்குவரத்துக்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.
மகளிா் பாதுகாப்புக்காக புதுவை காவல் துறையில் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, பாரதிதாசன் அறக்கட்டளைச் செயலா் ஜெ.வள்ளி, துணைச் செயலா் லட்சுமி, கல்வியாளா் தேவேந்திரநாத் தாகூா், ஐஸ்வரிய லட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.