சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!
சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் பயணம் மேற்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நாள்தோறும் வரவேற்பு அதிகரித்து வருகின்றன.
நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், முதல்முறையாக ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகளைக் கையாண்டு சென்னை மெட்ரோ சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1,03,78,835 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளது புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் இடையே நீல வழித்தடத்திலும் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர், இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
